Sunday, 30 August 2020

கல்லூரி நினைவுகள்!

முகநூல் பக்கம் கல்லூரி நண்பனின் பிறந்தநாள் நோட்டிபிகேஷன் பார்த்தேன் .

கல்லூரி முடிந்து வேலை கிடைத்து வாழ்க்கை நகர்கையில், நம்முடன் படித்த நாற்பது பேரும் நம்முடன் பயணிப்பதில்லை. அதில் இரண்டு மூன்று பேர் எப்போதும் நம் வாழ்வில் உடன் வருவார்கள். அவர்களிடம் மட்டும் தான் அவ்வப்போது பேசிக் கொண்டிருப்போம்.

முகநூல் பதிவைப் பார்த்து அவனுக்கு வாட்ஸாப்-ல் வாழ்த்து அனுப்பி, அவனிடம் நலம் விசாரித்துவிட்டு, கல்லூரி குரூப்பில் வாழ்த்து அனுப்பி மற்றவர்களுக்கும் இவன் பிறந்தநாளைத் தெரிவித்தேன்.

தெரிவித்து விட்டுக் கடைக்குச் செல்ல வண்டி எடுக்க, என்னுடன் பயணித்தன கல்லூரி நினைவுகள் .

கல்லூரியில் நான்கு வருடம் தினமும் எட்டு மணி நேரம் கழித்து, நான்கு மணியளவில் விடைபெறும் நாட்கள் நெஞ்சை அழுத்தியது. காலம் எனும் பேருந்தில் நிறைய பேருடன் பயணிக்கிறோம். ஆனால் அவர் அவர் இடத்தில் இறங்க ஞாபகங்களை மட்டும் சுமந்து இறங்காமல் போய்க்கொண்டே இருக்கிறோம்.

கல்லூரிப் பருவம் என்பது ஒரு விதமான அனுபவம். மீசை முளைத்த கர்வம் கொண்டு நாம்தான் என்ற ஒரு விதமான உணர்வு ஒரு புறம் இருக்க, சுவாரஸ்யத்திற்கும் பஞ்சம் இல்லை.முதல் சரக்கு, முதல் காதல், முதல் தம்மு என ஒவ்வொருவருக்கும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கும் ஒரு இடம்.

முதல் நாள் கல்லூரி, இன்றும் நினைவில் இருக்கிறது. காலேஜ் பஸ்சில் சீனியர்களுடன் ராகிங் பழகி, நட்புண்ட நினைவுகள் என்றும் மறக்க முடியாது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூட இப்போது தெரியாது,முகநூல் அப்டேட்-ல் பார்க்கக்கிடைத்த சிலர் தவிர.

படிக்கப் பிடிக்காமல் அரியர் வைத்து, அந்த அரியர் பரீட்சைக்குத் தனி நாள் ஒதுக்கி மரத்தடியில் படித்த கணங்கள் என்றும் மறக்கமுடியாது. இன்றைக்கு நான் வாழ்த்து தெரிவித்த நண்பனும் நானும் நிறைய அரியர் பரீட்சையில் பரிட்சியமானவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

கல்லூரி வளாகம், கான்டீன், HOD, பிடித்த ஆசிரியர்கள் என்று அனைவரும் இந்தப் பயணத்தின் காற்றில் என் இதயத்தில் வீசுகிறார்கள் .
 
இன்றும் அந்த கான்டீன் வெஜிடபில் பிரியாணி வாசம் நினைவிருக்கிறது.

பரீட்சை, செமினார், ப்ராஜெக்ட் மட்டும் அல்லாது நம் முதல் ஆசையும் நினைவிற்கு வருகிறது. அந்தப் பருவத்தில் ஹார்மோன்கள் இஷ்டத்துக்கு வேலை செய்யத் தொடங்குமே. அப்படி வேறு டிபார்ட்மென்ட் பெண்ணின் மீது ஒரு அவா இருந்தது. அந்த நாட்கள் நினைவிற்கு வந்தன.

உணவு வேலையில் அவள் கிளாஸ் சென்று அமர்வது, அவள் செல்லும் போது என் பெயரை ஒலிக்கச்செய்வது என அது ஒரு அழகிய மழைக் காலம் தான்.

அவள் பெயரையும் என் பெயரையும் சேர்த்து கல்லூரி வளாக மரத்தில் கிறுக்கிய நண்பன், அந்த மரம் இன்னும் இருக்குமா? என் பெயர் அவள் பெயர் மறையாமல் இருக்குமா இல்லை அதற்கு மேல் வேறு இரண்டு பேர்கள் திருத்தி எழுதப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. கல்லூரி முடிந்த பிறகும் என் பள்ளி நண்பனுடன் அவள் ஏரியா அய்யப்பன் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பல மாதங்கள் சென்றதில், ஒரே ஒரு சனிக்கிழமை அவளைக் கோவிலில் பார்த்து முகம் வேர்த்து, வழிந்து சிரித்து திரும்பி இருக்கிறோம் நங்கள்.

இன்று அவளுக்குக் கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை. முகநூல் பழக்கம் தொடர்கிறது அவ்வளவுதான்.

கல்லூரி நாட்களை நன்றாக அனுபவித்து, எப்படியோ அரீயர்களை க்ளியர் செய்து வேலையில் சேர்ந்து, அந்தத் தருணங்களை நினைக்கையில் மனதோடு ஒரு மழைக்காலமாய் என்றும் அது இருக்கிறது .

காலம் எனும் பேருந்து வேகமாகத்தான் போய்க்கொண்டிருக்கும். அவ்வப்போது ஒரு இடைவேளை விட்டு அந்தத் தருணங்களை நினைத்துப் பார்த்தால் சில நேரம் சில்லிட்டு, சிலிர்த்து நாம் மகிழலாம் என்றும்!

No comments:

Post a Comment