Friday, 31 July 2020

ஊஞ்சல்!

பிள்ளைகள் அமரா நேரத்திலும் 
ஆடிக்கொண்டிருக்கிறது ஊஞ்சல்!

அம்மையாய் தென்றல் அசைக்க,
குழந்தையாய் ஆடிக்கொண்டிருக்கிறது ...
மழைத் துளிகளும் 
சிலநேரங்களில் 
கோடை வெயிலும்!

கடல்!

கடலைப் பொருத்தவரை கரை ஒன்றுதான்
கரையைப் பொருத்தவரை கடல் ஒன்று தான்
கடலுக்குக் கப்பலும் ஒன்று தான் படகும் ஒன்றுதான்

இந்தக் கடலுக்கும் கரைக்கும் நடுவே இருக்கும்
மண்ணில்,

பல கால் தடங்கல் இங்கே அதற்குரிய கால்கள் தான் எங்கே?

இங்கே இந்தக் கரை மணலின் தடம் பதித்த பதிக்கின்ற
மனிதர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் எத்தனை வாழ்க்கை பரிமாணங்கள்

பள்ளி சென்று விடுமுறை கழிக்கும் பிள்ளைகளும் இங்கே
விடுமுறை இல்லாத வேலை செய்யும் சிறார்களும் இங்கே.
பஸ்ஸில் பயணித்து வரும் ஏழைகளும் இங்கே
காரில் வரும் பணக்காரர்களும் இங்கே
மீன் வறுவலின் வாசமும் இங்கே
வெங்காய பஜ்ஜியின் வாசமும் இங்கே
பஞ்சிமிட்டை விற்பவனும் இங்கே
சோம்பப்படி விற்பவனும் இங்கே
சுண்டல் விற்பவனும் இங்கே
சுக்கு காபி விற்பவனும் இங்கே
ஒருதலைக் காதலனும் இங்கே
உச்சி வெயில் காதலர்களும் இங்கே
பிட்சை எடுக்கும் பிள்ளைகளும் இங்கே
பிட்சைப் போடும் பிள்ளைகளும் இங்கே
குதிரையும் இங்கே
நாய்களும் இங்கே
பொம்மை விற்பவனும் இங்கே
பொம்மை வாங்குபவனும் இங்கே
உப்பு காற்றும் இங்கே
ஊத காற்றும் இங்கே
சூரியன் அஸ்தமனம் இங்கே
கருமேகம் உற்பத்தியும் இங்கே

இப்படி அனைத்து கால்தடங்களையும்,பரிமாணங்களையும் தாங்கிக்கொள்ளும் இந்தக் கடல் மணல்கள் என்றும் இங்கே
இதைக் கடந்து சென்ற மனிதர்கள் எங்கே??

Thursday, 30 July 2020

சறுக்கல்கள்!

கவிழ்ந்து தவிக்கும் கரப்பானைப் போலத்தான்
சிலரது வாழ்கையும்
மீண்டு எழுவதற்குள் 
ஆயிரம் சறுக்கல்கள்!

திட்டுத் திட்டாய்!

திட்டுத் திட்டாய் இருக்கும் மேகக் கூட்டங்களைப் பார்க்கும் பொழுது 
அவளின் வியர்வை கலந்த பவுடர் திட்டுகள் 
நினைவிற்கு வருகிறது!

நேரம்!

நேரம் சரி இல்லை என்றேன் 
சரியாகத் தானே 
இருக்கிறது என்றார், 
என் நேரம் சரி இல்லை என்றேன் 
மணிக்கட்டைத் தூக்கிப் பார்த்துச் சரியாகத் தானே 
இருக்கிறது என்றார் 
குழம்பியபடியே ஓடிக்கொண்டிருந்தது கைக்கடிகாரம்!

வெயிலும் தேவைதான்!

மழைக்காலத்தில் கொஞ்சம் வெயிலும் தேவைதான்,
துவைத்த துணிகளை உலர்த்தி எடுக்க!

போக்குவரத்து சமிக்கை!

துன்பங்களே சுமந்து பயணிக்கும் வாழ்க்கையில் 
சில நேரங்களில் 
இன்பம் எனும் போக்குவரத்து சமிக்கைத்  
தேவைப்படுகிறது இளைப்பாற!

காட்சிப்பிழை!

சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமனம் வரை 
கணக்கிட்டு நேரத்தை அளந்த 
முன்னோர்களின் கணக்கில் 
காட்சிப்பிழையாய் 
வந்தது மழைக்காலம்!

Wednesday, 29 July 2020

நாடகம்!

சீலையைத் தூக்கி நடக்கும் பெண்கள் 
வாகனங்களைக் கண்டு பதுங்கும் ஆண்கள் 
சாலைகளில் மேடு பள்ளம் தெரியாமல் சறுக்கி விளையாடும் மோட்டார் சைக்கிள்கள் 
குளியல் போடும் கலர் குடைகள், 
இந்த மழை நடத்தும் நாடகங்களை 
அமைதியாய் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது 
மரத்தடி மாடு !

Sunday, 26 July 2020

மெய் எழுத்துக்கள்!

இருநூற்றுப் பதினாறு  உயிர் மெய் எழுத்துக்கள் போதவில்லை எனக்கு, 
உன்மீது நான் கொண்ட காதலை உணர்த்த!

Saturday, 25 July 2020

அன்னை மடி!

ஆணின் தோள்பட்டைக்  கூட 
அன்னை மடிதான்,
பிரயாணத்தில் அவள் உறங்கியபொழுது!

மகிழ்ச்சி!

துக்க வீட்டு விருந்தைக் கூட
மகிழ்ச்சியுடன் உண்கிறான் 
தெரு முனை பிச்சைக்காரன்!

பொம்மை

தன் பிள்ளை ஆசையாய்க் கேட்ட 
நாய் பொம்மையை வாங்க முடியாத 
தினக்கூலி அப்பா,
தன் கை விரல் நிழல்களால் 
சுவற்றில் செய்தார் ஆயிரம் பொம்மைகள்!

கால மாற்றம்!

அரிக்கேன் விளக்கின் வாசத்திற்கும், 
செல்போன் ஒளியின்
கண் கூச்சத்திற்கும்
இடையே ...எத்தனை மின்வெட்டுகள் இந்த வாழ்க்கையில்!

வாழ்க்கை எனும் பயணம்!

எட்ட முடியா உயரத்தில் வானம் 
கடக்கமுடியா தூரத்தில் கடல் 
இவை எட்டியபிறகு
கடந்து செல்கின்றேன் 
வாழ்க்கை எனும் பயணத்தை நோக்கி !

Monday, 20 July 2020

காத்திருப்பு!

காத்திருக்கும் தருணத்தில் 
கால் ரெண்டும் நோகுதடி 
கத்திரி வெயில் தாக்கத்தில் 
கண் இரண்டும் பூத்ததடி
உன் நடுவாகுச் சிரிப்பினால் 
இவை இரண்டும் தோற்றதடி 
உன் வாசம் பட்டதும் என் சுவாசம் மீண்டதடி!

Sunday, 19 July 2020

கருமேகங்களுக்கு இடையே காதல்!

கருமேகங்களுக்கு இடையே காதல்
முத்தச் சத்தமாய் இடி இடிக்க
அதைக் கொச்சையாய் நினைத்துக் காதுகளை மூடும் மக்கள்
அதைக் காணத் துடிக்கும் இளசுகளின் கண்களைப் பறிக்கும்
காவலனாய் மின்னல்
ஆம் இந்த இயற்கைகளிடையிலும் ஒரு காதல் மலரத்தான் செய்கிறது!

மழை!

மழை
வெயிலின் எதிரி
விவசாயிகளின் ஒரு தலைக் காதலன்
மாணவர்களின் நண்பன்
குடைகளை குளிக்க வைக்கும் தாய்
காதலர்களின் மன நோய்க்கு மனநல மருத்துவன்
செருப்புகளையும் சேற்றையும் இணைக்கும் ஒரு இடைத்தரகன்
குடிசைகளுக்குக் கந்துவட்டிக்காரன்
வீட்டுக்காரர்களுக்கு ஒரு சேகரிப்பு வங்கி
மொத்தத்தில் அவன்
இந்தப் பூமிக்கு
மழை!  

கொட்டு!

மரத்தின் இலைகள் கூட
பள்ளிகூடத்தில் படிக்கிறது போலும்,
மழையிடம் கொட்டு வாங்கிக்கொண்டிருக்கிறதே!

சிந்தனைகள்!

ஒவ்வொரு மழைத்தூறலிலும்
சிந்திக்கொண்டுதான் இருக்கிறது
ஒரு தலைக்காதலனின் சிந்தனைகள்!

Wednesday, 15 July 2020

காதல் செய் !

காதல் செய்
பட்டாம்பூச்சியை வயிற்றில் தேடு
கத்திரியில் நட
மழையில் நனை
முகவரியை மாற்று
கனவில் வாழு
மெலடி கேல்
அனைத்துப் பாடல்களிலும் நீ
கடிதம்வரை
புகைப்படங்கள் சேகரி
கண்களைப் பார்க்காதே
அவள் பாதையில் உனது பெயரை ஒலிக்கச்செய்
நண்பனிடம் புலம்பு
தத்துவம் பேசு
வார்த்தைகளை முழுங்கு
அவள் உதட்டில் உன் சிரிப்பைக்காண்
காதலைச்  சொல்
பதிலிற்காக ஏங்கு
சுவாசப் பயிற்சி செய்
காதலித்தால் உயிர்பிழை
இல்லையெனில்
உன்னை உனக்குள் தேடு
மீண்டு எழு
காதல் செய் !

மழை!

வானத்துடன் கொண்ட காதல்
தோல்வியுற்றதாலோ ஏனோ
இந்த மேகம் மழையாய்
கண்ணீர் சிந்துகிறது!
----------------------------------------------------------------------
இலைகளில் தேங்கி இருக்கும்
மழைத் துளிகள் போல் தான் காதலும்
காற்றுவீசினால் நொறுங்கிவிடும் மண்ணில்!

கருமேகம்

கருமேகம் சுரக்கையில்
மொட்டை மாடி கொடித் துணிகள் மறையும்
வீட்டின் மின்விளக்குகள் எரியும்
காதலன் கவிஞனாவான்
அடுப்படியில் பஜ்ஜி வாசம் வீசும்
அனைத்து வீடுகளிலும் ஒலிக்கும் மெலடி பாடல்கள்
மண்ணின் வாசத்துடன் கலந்துரையாடும் தேநீர் வாசம்
கைபேசிகள் உச்சரிக்கும் வார்த்தை,
இங்கு நல்ல மழை அங்க எப்படி!

ஜோர் மழை!

ஜோர் மழை
கொடை கொண்டு போனீங்களா நல்ல மழை பெய்யுது என்றாள் அம்மா
இன்னிக்கு லீவு டா என்றான் மகன் தன் நண்பனிடம்
நல்ல மழை குடிசை ஒழுகுது  என்றாள் சித்தாளின் மனைவி
ஆட்டோ வராது அந்தப் பக்கம் லாம் தண்ணி என்றான் ஆட்டோக்காரன்
குடங்களை எடு மாடியில் வைத்து நிரப்புவோம் என்றான் வாடகைக் காரன்
பஜ்ஜி வேண்டும் என்றான் ஒருதலை காதலன்
இப்படி
ஒரே நேரத்தில் அணைத்து வகையான உணர்வுகளும் தரக்கூடியது இந்த மழை மட்டும் தான்!

Sunday, 12 July 2020

வாழ்க்கை


தாய்ப் பாலின் சுவை
தந்தையின் பாசம்
தாத்தா பாட்டி செல்லம்
முதல் நாள் பள்ளிக்கூடம்
முதல் நண்பன்
ஆசிரியர்களின் அடி உதை
பரிட்சை காலத்து இதயத்துடிப்பு
மழை நாள் விடுமுறை
மாலை நேர டியூஷன்
டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
சில சீரியல்கள்
பள்ளி வேன் பயணங்கள்
பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் நாள்
கல்லுரி தேர்ந்தெடுக்கும் நாடகம்
501 ரூபாய் கைபேசி 
முதல் நாள் கல்லூரி
புது நண்பர்கள்
கல்லூரி கிரஷ்
ஏழு மணி பஸ்
கொஞ்சம் ரேகிங்
பைனல் இயர் ப்ராஜெக்ட்
கல்லூரி பெஞ்ச் கிறுக்கல்கள்
கடைசி நாள் கல்லூரி
முதல் காதல் தோல்வி
கிரேஜுவேஷன் டே
வேலை தேடும் படலம்
முதல் சம்பளம்
ஐடி கம்பெனி காதல்
ஐடி கம்பெனி நண்பர்கள்
காதலியுடன் திருமணம்
முதல் குழந்தை 
இந்த வாழ்க்கையிலும் ஒரு சுகம் உண்டு நண்பா!

என்றென்றும் காதல்!


காலங்கள் மாறலாம்
கடவுள் மாறலாம்
கண்டங்கள்  மாறலாம்
நிறங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நண்பர்கள்  மாறலாம் 
காதலி கூட மாறலாம்
ஆனால் என்றும் மாறாமல் இருப்பது 
காதல் மட்டும் தான்!

கல்லூரி தருணங்கள்


கல்லூரி நாட்களில் கடக்க முடியாத சில தருணங்கள்,
காதலை சொல்லிவிட்டு பதிலுக்காகக் காத்திருப்பது 
மற்றொன்று 
பரிட்சையில்
பதில் தெரியாமல் 
முதல் நாற்பத்தைந்து நிமிடங்களைக் கடப்பது!

Thursday, 9 July 2020

பொலிவு

செக்கச் சிவந்த வானம் 
மறையும் கதிரவனின் ஒளி 
வீட்டின் கதவில் பட்டு 
அவள் முகத்தில் கூசியது,
என் கைபேசியின் 
ஆட்டோ பிரைட்னஸ் ஸ்தம்பித்தது 
அளவு தெரியாமல் !

ஸ்டிக்கர் பொட்டு

முப்பது வயதாகியும் 
அம்மாவின் நெற்றியில் வீற்றிருக்கும் 
ஸ்டிக்கர் பொட்டில் கை வைத்து 
விளையாடி உறங்கும் பழக்கத்தை  
மறக்க முடியாமல், 
இன்று அவள் இல்லையெனிலும்
விளையாடிக்கொண்டிருக்கிறேன் 
அதே பொட்டுடன்,
அவள் நெற்றியில் அல்ல...
அவள் ஒட்டிச் சென்ற பீரோ 
கண்ணாடியில்!
-----------------------------------------------------------------
அட்டைக் கவரில் மிதந்து 
அவளின் நெற்றியில் படர்ந்து 
அவனின் மார்பில் தொலைந்து
கண்ணாடிகளில் நிறைந்து
குங்குமத்துடன் கலந்து
மடிகிறேன் நான்
 குப்பை தொட்டிக்குள்!
------------------------------------------------------------------

நினைவுகள்

கொடியில் காயும் துணிகளிலிருந்து 
சொட்டும் தண்ணீரைச் சிறிது நேரம் உற்றுப் பார்க்கையில்
நினைவிற்கு வருகிறது,
அம்மா இறந்த பிறகும் 
சொட்டிக் கொண்டிருந்த... 
டிரிப்ஸ் பாட்டிலின் 
மருந்துத் துளிகள் !