Sunday, 4 February 2024

தாய்மை

 பிரசவ அறைக்குள்
கண்ணீருடன் சென்ற அவளின் கண்களில்
உணர்ந்தேன் தாய்மையை!

நந்தியாவட்டை!

கவிதை எழுதவில்லை                                                                     
சரியாகக் கவனிக்கவில்லை 
பக்கம் நடந்து செல்லவில்லை 
தண்ணீர் ஊற்றவில்லை 
குப்பையென எண்ணிக் கண்டுகொள்ளவில்லை 
ஆனாலும் தினம் தவறாமல் 
மலர்ந்து விடுகிறது பூக்கள்
இந்த நந்தியாவட்டை மரத்தில்
என் வாயிலை அலங்கரிக்க!

Sunday, 6 February 2022

காதல்... காதல்....

பதட்டம்

தூக்கமின்மை 

பசியின்மை

தனிமைப் புலம்பல்கள் 


அட பரீட்சை அல்ல ...........

காதல்! 


அகல் விளக்கின் ஒளியில் 

மின்னும் அவளின் முக ஞாபகம்  

அந்த மின்சாரம் இல்லா இரவில்கூட

சிறு புன்னகையைத் தரும்!


காலை சூரியனைத் தட்டி 

சீக்கிரம் வரச்சொல்லும் 

காதலின் அவசர அவஸ்தை

அவளின் ஒரு அழைப்புக்குப் பிறகு  

அமைதி அடையும்!


காலமாற்றம் போல 

மனம் முழுதும் ஒரு வித 

வினோத மாற்றம்

அதை அனுபவித்த

காதல் கிருக்கர்கள் ஏராளம்! 


இது என்ன அதிசயம் 

காலமும் நேரமும் 

காதலுக்கு விடுமுறை தந்ததே!

இருபத்தி நான்கு மணி நேரமும் 

ஸ்தம்பித்துப் போகுதே!


இரவு பத்து மணிக்கு முடிந்த 

அந்த நூறு இலவச குறுஞ்செய்தி 

நள்ளிரவில் புதுப்பித்து 

இரவை உறங்கச் செய்யுதே!


இதயத்தை மட்டும் கேட்கும் 

காதல் ஒரு 

சுயநலம் இல்லாத 

சுகமான உணர்வுதான்! 


காதல் எனும் 

மூன்றெழுத்து மந்திரம் 

செய்யும் தந்திரம் 

நம் உடலை எந்திரம் போலச் 

சுழலவைக்கும்...

சலிப்பில்லாமல் களைப்பில்லாமல்!


போதாது ஒரு ஜென்மம் 

காதலை உணர,..


பிரிந்த பின்பும் 

நினைவுகளைத் தந்து 

எண்ணிய வாழ்கையைக் 

கடந்து செல்ல ஒரு 

சுமையான பாலமாய் 

காதல்... காதல்....


காலம் கடந்த பின்பும்...

 காலம் கடந்த பின்பும்

முதல் காதல் மறைவதில்லை

பிரிவைக் கடந்த பின்பும்

முன் நிகழ்வை மறக்கவில்லை


இதயம் கடக்க மறுத்தும்

காலம் கடக்க வைத்த

நம் காதல்

காலத்தின் வற்புறுத்தலே


காலை விழித்ததும்  

கண்கள் கைப்பேசியைத் தேடியதே

உன்னிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள் காணாது

கைப்பேசியும் செயலிழந்ததே


உன் பிறந்த தினம் அதில்

உன்னை வாழ்த்தவே மனம் துடிக்குதே

வாழ்த்தியபின் படபடத்து வானில் திரியும் பட்டாம்பூச்சியாய் மனம் பறந்ததே

ஒரு செயலில் இரு உணர்வுகளை

உணர்த்துவது காதலே!


என்

முற்றுப்பெறாத கவிதையைப் போல

முற்றுப்புள்ளி வைக்கமுடியாத நம் காதல்

போதும் எனக்கு.....


முதல் காதல்

முதல் கவிதை

முதல் வெட்கம்

அடி வயிற்றுப் பட்டாம்பூச்சி

முடிவுறாத உன் நினைவுகள்

போதும் எனக்கு.........


Tuesday, 3 November 2020

சொல்லாமல் சொல்கிறது!

குடையை உயர்த்தி 
தலையை நீட்டி 
மழை விட்டதா என்று பார்க்கையில் 
மழைத் துளி ஒன்று
கண் இமையில் விழுந்து
கண்களை நன்கு துடைத்துப் பார் என்று 
சொல்லாமல் சொல்கிறது!

அழகு!

காக்கை கூட அழகுதான் 
மழையில் நனைந்து  
உடலை அசைத்து 
நீரை உலர்த்தும் பொழுது!

பிரிவின் மிச்சம்!

மழை ஓய்ந்த பின்னும் 
அதன் நீனைவுகளாய் 
தேங்கி நிற்கும் மழை நீர் 
பிரிவின் மிச்சம்!