Tuesday, 25 August 2020

மனித இயந்திரம் பெண்!


"வாங்க உட்காருங்க", சொல்லி தண்ணி கொண்டு வந்தாங்க என்னோட அத்தை.

கல்யாணம் முடிஞ்சி, நான் எப்போ அத்தை வீட்டுக்கு போனாலும்  அந்த  வீட்ல கடிகாரம் கூட நின்னு பாத்துருக்கேன், ஆனா இவங்க நின்னோ உட்காந்தோ பாத்ததில்லை. ரொம்போ முடியல காச்சல் மாதிரினா மட்டும் தான் முடங்கிக்  கெடப்பாங்க.

காலைல அவங்க வீட்டுக்குப் போனா பம்பரம் மாதிரி சுழன்று சுத்திகிட்டு இருப்பாங்க.

"அம்மா பால்" குரல் கேட்கும், உடனே பாத்திரம் எடுத்துட்டுப் போவாங்க. குப்பை அள்ள ஆட்கள் வருவாங்க அதுக்கும் இவங்க தான் போவாங்க ..முடிச்சு வந்து காலை சாப்பாடு பண்ணுவாங்க. எல்லாருக்கும் பரிமாறிட்டு அவங்க சாப்பிட ஒரு 10.30 மணி ஆய்டும். அடுத்து டீ போட்டுத் தருவாங்க எல்லாருக்கும். ஒரு 11.30 மணிக்கு அப்டியே மதிய நேரம் சமையல் ரெடி பண்ணுவாங்க. நடுவுல அப்போ அப்போ போன் வரும், கிட்சன்-ல கொண்டு போய் பேசிட்டே சமையல் வேல பாப்பாங்க. அத முடிச்சு எங்க எல்லாரையும் உட்கார சொல்லிட்டு பரிமாறி முடிக்க 3 மணி ஆகிடும். அப்புறம் மீதம் இருக்கறத எடுத்துப் போட்டு சாப்பிட்டு பாத்திரம் தொலக்கப் போயிடுவாங்க.

கொஞ்ச நேரத்துக்கு உட்காரலாம்-னு வருவாங்க, மாமா தண்ணி கொடுனு கேப்பாங்க, இல்லனா மச்சான் டீ போடுங்கனு கேப்பாரு, அப்டியே இரவு 10 மணி வர கிட்சன் பணிவிடைகள்.

அப்டியே ஓடிரும் அவங்க தின வாழ்க்கை .

எனக்கும் தோனும், தினமும் இதான் வாழ்க்கைனு சுழலற அவங்களுக்கு சலிப்பே இருக்காதா??

அவங்க படிச்சது M A ஆங்கில இலக்கியம், அதுக்கும் அவங்க இப்போ பண்ற வேலைக்கும் என்ன சம்மந்தம். அவங்களுக்குனு ஒரு ஆசை வேலைனு இல்லாம, இப்டி ஓடிட்டே இருக்காங்க குடும்பத்துக்காக. சுயநலம் இல்லாத ஒரு இயந்திரம் தான் சில பெண்கள்னு தோணும் அதுல இவங்க ஒருத்தங்க.

எங்க வீட்டுல வேல செய்ற அக்கா காலைல தினமும் 8.30 மணிக்கு வந்துருவாங்க. 11 மணி வர சமையல் கூட்டுறது தொடைக்கறது பாத்ரம் தேய்க்கறதுனு வேல பாத்துடே இருப்பாங்க. "கொஞ்சம் 10 மணி ஆனா சொல்லுங்க: இலவச அரிசி பருப்பு தர்றாங்க போயி வாங்கணும். என் பையன் இந்த வேலைலாம் செய்யமாட்டான். வீட்டுக்காரரு ஒரு சீக்காளி, படுத்த படுக்கையா இருக்காரு"-னு  சொன்னாங்க. அஞ்சு வீட்ல வேல செய்றேன் மதிய சாப்பாடுக்கு 4 மணி ஆயிடுதுன்னு சொல்றாங்க. கேக்கவே கஷ்டமா இருந்துச்சு.

எப்படி அவங்க வீட்டையும் பாத்துட்டு, எல்லா வீட்டு வேலையும் பாக்குறாங்கனு தோணும். இப்படியும் நாட்ல பலபேர் இருக்காங்களே!

நம்ம தெருக்கள்ல தூய்மைப் பணியாளர்கள் கொஞ்ச பேர் தினமும் குப்பைகளை அள்ளிட்டுப் போவாங்க.

பாவம் அவங்க வீட்டுக் குப்பைகளை அள்ளுறது யாருனு தெர்ல. அவங்க வீட்டு அடுப்பெரிய, இவங்க இப்டிலாம்  மத்த குப்பையை அள்ளுறாங்கனு தோணும். அதிலும் முக்காவாசி பேர் ஒரு தெருவுக்கு ஒரு ஆண் இரண்டு பெண்கள் வராங்க. வயித்து பிழைப்பிற்கு என்னலாம் பண்றாங்க. இவங்க வீட்டுக்குப் போய் இதே கைகள்ல சாப்பிடணும், குழந்தையை தூக்கணும் எவ்ளோவோ இப்டி சகிச்சுக்கிட்டு இதெல்லாம் பண்றாங்கனு தோணும்.

அப்டி ஒரு அம்மா அவங்க ரெண்டு பெண் குழந்தைகளோட தினமும் ஒரு தெருல குப்பை அள்ளறாங்க .

அந்த குழந்தையை வெயில் படாம ஒரு ஓரமா உட்காரவெச்சிட்டு இவங்க வண்டி தள்ளி குப்பை அள்ளிட்டு, அந்த குழந்தைங்களை அப்டியே கூட்டிட்டுப் போறாங்க. கொடுமையான வாழ்க்கை இது அப்டினு தோணும்.

இவங்க எல்லாருமே ஓட்றது அவங்க அவங்க வீட்டுக்காகத் தான் .

இவங்க எல்லாருமே மனிதப் பெண்கள்னு சொல்லமுடில. மனித யந்திரமா தான் என் கண்ணனுக்குத் தெரியறாங்க. இன்னும் சொல்லப்போனா அவங்க வாழ்க்கையத் தொலைச்சிட்டு மத்தவங்க வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ற தெய்வங்கள் தான்!

 

No comments:

Post a Comment